சொக்கநாதன் புத்தூர் நந்தி கோவில்

ராஜபாளையம் - தென்காசி பேருந்துச் சாலையில் தேவிபட்டணம் விலக்குக்கு சற்று தென்கிழக்கே சொக்கநாதன்புத்தூர் உள்ளது.    

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்தில் சொக்கநாதன் புத்தூர் என்ற சிற்றூர் இருக்கிறது. மதுரை மீனாட்சி இந்த ஊர்க்காரி என்று இந்த ஊர்க்காரர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். மீனாட்சியை மணந்து கொள்ள சொக்கநாதர் இங்கே வந்தார். அவரை வரவேற்க புதிய ஊராகத் திருவிழாக் கோலம் பூண்டது. இதனால் 'சொக்கநாதன் புத்தூர்'' என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.

இந்த சொக்கநாதன் புத்தூரில் உள்ள நந்தியை பிரதோஷ வேளையில் வழிபட நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நந்திக்கு 'செவி அறுந்த நந்தி தேவர்'' என்று பெயர். இந்த நந்தி நிலையில் இடப்பக்கக்காது உடைந்து விட்டது. ஏறத்தாழ 400 ஆண்டுக்கு முன் ஊருக்கு வெளியிலுள்ள ஒரு வயலில் இந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. அப்போதே காது உடைந்திருந்தது. எனவே, 'செவி அறுந்த நந்தேசுவரர்'' என்று பெயரிட்டார்கள்.

வயலில் கண்டெடுத்த நந்தியை வைத்து, ஒரு கோவில் கட்டப்பட்டது. கோவிலிலும் நந்தி வடக்கு நோக்கியே இருக்கிறது. நந்திக்கு எதிரில் லிங்கம் ஒன்றும் நிறுவப்பட்டது. லிங்கம் எதிரில் நந்தி நிறுவுவது தான் வழக்கம். ஆனால், இங்கு நந்தி முன் லிங்கம் நிறுவப்பட்டது தனிச்சிறப்பு. நந்தி சிலை மிகவும் பெரியது. 

முதுகில் பட்டாடை கழுத்தில் இரண்டு அடுக்காக மணியும், மாலையுமாக பார்த்தாலே பக்தி பெருகும் சிலை. அழகு மட்டுமல்ல, ஆற்றலும் நிறைந்தது. பிரதோஷ வழிபாட்டுக்கு வருகிறவர்கள் தங்கள் மனக்குறைகளை நந்தி தேவரிடம் சொல்லுவார்கள். நந்தி தேவர் அவற்றை சிவபெருமானிடம் கூறி, பரிகாரம் தேடித் தருவார் என்பது ஐதீகம். நாள் தோறும் நடுப்பகல் பூஜை நடக்கிறது.

பிரதோஷ நாளில் 18 வகை நறுமணப் பொருட்களுடன் லிங்கத்துக்கும், நந்திக்கும் நீராட்டு நடக்கிறது. சிறப்பு அலங்காரம், பூஜைகளும் நடக்கின்றன. இங்கு வந்து போனால், மனக் கவலை, பணக் கவலை தீருகிறது என்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்