பண விபரங்கள்
பணம் பற்றிய செய்திகளுக்கு உங்கள் வழிகாட்டி
செலுத்துதல்/செலுத்துவதற்குரிய ஒரு வழியாகிய பணம் இருக்கிறது. நாணயங்கள், பணத்தாள், திரும்பப் பெறத்தக்க வங்கி வைப்புத் தொகைகள் ஆகியன பணத்தில் அடங்கும். இன்று கடன் அட்டைகள், மின்னணுப்பணம் ஆகியன தொகை செலுத்தும் முறையின் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்துள்ளன. இருப்பினும் ஒரு சாதாரண மனிதனுக்குப் பணம் என்பது பணத்தாளும், நாணயங்களும்தான். ஏனெனில் இந்தியாவில் தொகை செலுத்தும் முறை, குறிப்பாக சில்லறைப் பரிமாற்றங்கள் இன்னமும் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சுற்றியே சுழல்கிறது. எப்படி இருப்பினும் ஒரு சாதாரண மனிதன், தான் நாள்தோறும் கையாளும் பணத்தாள், நாணயம் ஆகியன பற்றி மிகச் சிறிதே அறிந்துள்ளான்.
இந்திய நாணயம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்குப் பதிலளிக்கும் முயற்சி இது.
சில அடிப்படைகள்
இந்திய நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இந்திய நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. நாணயங்கள் பைசா என அழைக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் 100 பைசாக்கள் கொண்டது.
இன்றைய இந்திய பணத்தாள்களின் இலக்க மதிப்புகள் யாவை?
இன்று இந்தியாவில் ரூ.5, 10, 20, 50, 100, 500, 1000 ஆகிய இலக்க மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியினால் (ரிசர்வ் வங்கி) வெளியிடப்படுவதால் இவை வங்கித்தாள்கள் எனப்படும். ரூ.1, ரூ.2 ஆகியவை நாணயமாக வெளியிடப்படுவதால், இந்த மதிப்பிலான பணத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் முன்னர் வெளியிடப்பட்ட பணத்தாள்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. ரூ.5 மதிப்பிலான பணத்தாள்கள் அச்சிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ5/- மதிப்பிலான நாணயங்களின் தேவைக்கும் அளிப்புக்கும் இடையேயுள்ள இடைவெளியினை நீக்குவதற்காக இவற்றில் மீண்டும் பணத்தாள்கள் அறிமுகப்படுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதுள்ள நாணயங்களின் இலக்க மதிப்புகள் எவை?
இந்தியாவில் 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் ஆகிய இலக்க மதிப்பிலான நாணயங்கள் உள்ளன. 50 பைசா வரை உள்ள நாணயங்கள் சிறு நாணயங்கள் எனவும், ரூபாய் ஒன்றும், அதற்கு மேலும் மதிப்புள்ள நாணயங்கள் ரூபாய் நாணயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
வங்கித் தாள்களும் நாணயங்களும் இந்த இலக்க மதிப்புகளில் மட்டும்தான் வெளியிடப்பட முடியுமா?
தேவை இல்லை. மத்திய அரசின் அறிவுரைப்படி இந்திய ரிசர்வ் வங்கி ஓராயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய், அல்லது எந்த இலக்க மதிப்பிலும் வெளியிட இயலும். இருந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் இப்போதைய விதிகளின்படி பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட இலக்க மதிப்புகளில் பணத்தாள்கள் இருக்க முடியாது. நாணயங்களை ரூ.1000 இலக்க மதிப்புவரை வெளியிடமுடியும்.
பண நிர்வாகம்
பண நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?
ரிசர்வ் வங்கி இந்தியாவில் பண நிர்வாகம் செய்கிறது. அரசு ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில் பல்வேறு இலக்க மதிப்புகளை முடிவு செய்கிறது. ரிசர்வ் வங்கி, வங்கி நோட்டுகளை வடிவமைப்பதில் (பாதுகாப்புத் தன்மைகள் உட்பட) அரசுடன் சேர்ந்து பணிசெய்கிறது. இலக்க மதிப்பு வாரியாக தேவைப்படும் பணத்தாள்களின் அளவினை ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு இந்திய அரசின் மூலம் பல்வேறு அச்சகங்களுக்கு தனது தேவைப்பட்டியலை அளிக்கிறது. அச்சகங்களிலிருந்து பெறப்படும் பணத்தாள்கள் வெளியிடப்படுவதுடன் இருப்பும் வைத்திருக்கப்படுகிறது. வங்கிகளிலிருந்தும் பணவறையிலிருந்தும் பெறப்படும் பணத்தாள்கள் பரிசோதிக்கப் படுகின்றன. புழக்கத்துக்குத் தகுதியானவை திரும்பவும் வழங்கப்படுகின்றன. புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் தரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மற்றவை (அழுக்காடைந்தவையும், சேதமடைந்தவையும்) அழிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி பண நிர்வாகப் பணியைப் பெறுகிறது.
இந்திய அரசின் பங்கு என்ன?
நாணயச் சட்டம் 1906 இன்படி காலத்துக்குக் காலம் அதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் அடிப்படையில் நாணய உருவாக்கம் இந்திய அரசின் பொறுப்பில் உள்ளது. நாணய வடிவமைப்பினையும் பல்வேறு இலக்க மதிப்புகளில் நாணயங்களை அடித்தலையும் இந்திய அரசு மேற்கொள்கிறது.
எவ்வளவு வங்கி நோட்டுகள், அச்சிடப்பட வேண்டும், மற்றும் எவ்வளவு மதிப்பிற்கு என்பதை முடிவு செய்பவர் யார்? எந்த அடிப்படையில்?
இந்திய ரிசர்வ் வங்கி, எவ்வளவு மொத்த வங்கி நோட்டுகள் மற்றும் எவ்வளவு மதிப்புற்கு என்பதை முடிவு செய்கிறது. எவ்வளவு அச்சிடப்பட வேண்டும் என்பது பெரும்பாலும் புழக்கத்திற்குத் தேவையான வங்கித்தாள்களுக்காக குறிப்பிடப்படும் வருடாந்திர அதிகரிப்பு, அழுக்கடைந்த நோட்டுகளை அகற்றுதல், இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்யப்படுகிறது.
எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்பவர் யார்?
இந்திய அரசு எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.
வங்கி நோட்டுகளின் தேவையை ரிசர்வ் வங்கி எவ்வாறு முடிவு செய்கிறது?
பொருளாதார வளர்ச்சி விகிதம், மாற்றீடு செய்யும் தேவை, இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப் புள்ளியியல் முறைகளில் கணக்கிட்டு மதிப்பீடு செய்கிறது.
ரிசர்வ் வங்கி நாணயம் / பணத்தாள்களை எவ்வாறு மக்களிடம் சென்றடையச் செய்கிறது?
ரிசர்வ் வங்கி அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேசுவர், பேலாபூர் (நவிமும்பை), கோல்கத்தா, சண்டிகார், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை (கோட்டை), நாக்பூர், புதுடில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனது அலுவலகங்களின் மூலம் பணச் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த அலுவலகங்கள் பணத்தாள்களை அச்சிடும் அச்சகங்களிலிருந்து புதுத்தாள்களை நேரடியாகப் பெறுகின்றன. அதைப்போன்றே கோல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புதுடில்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் நாணயக் கூடங்களிலிருந்து நாணயங்களைப் பெறுகின்றன. இந்த அலுவலகங்கள் அவற்றை மற்ற ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்புகின்றன. பணத்தாள்களும் ரூபாய் நாணயங்களும் பணவறையிலும், சிறு நாணயங்கள் சிறு நாணயக்கூடத்திலும் இருப்பு வைக்கப்படுகின்றன. வங்கியின் கிளைகள் பணவறையிலிருந்தும், சிறுநாணயக்கூடத்தில் இருந்தும் பணத்தாள்களையும் நாணயங்களையும் பெற்று பொது மக்களுக்கு வழங்குகின்றன.
பணவறை என்பது என்ன?
பணத்தாள்களையும் நாணயங்களையும் வழங்குவதற்கு ஏற்ற வகையில் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு பணவறைகளை நிறுவ அதிகாரம் அளித்துள்ளது. இவை உண்மையில் ரிசர்வ் வங்கிக்காக பணத்தாள்களையும் நாணயங்களையும் சேர்த்து வைக்கும் பண்டக சாலை ஆகும். தற்போது 4368 பணவறைகள் உள்ளன. பணவறை வங்கிகள் தங்கள் செயலாக்கப் பகுதியிலுள்ள மற்ற வங்கிகளுக்கு பணத்தாள்களையும் நாணயங்களையும் வழங்கவேண்டும்.
சிறு மதிப்பு நாணயக்கூடம் என்பது என்ன?
சில கிளை வங்கிகள் சிறுநாணயங்களைச் சேமித்து வைத்துக் கொளவ்தற்காக சிறுமதிப்பு நாணயக்கூடங்களை அமைத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலும் 3708 சிறுமதிப்பு நாணயக் கூடங்கள் உள்ளன. சிறுமதிப்பு நாணயக்கூடங்கள் தங்கள் செயலாக்க எல்லையில் உள்ள மற்ற வங்கிக் கிளைளுக்கு நாணயங்களை வழங்குகின்றன.
பணத்தாள்களும், நாணயங்களும் புழக்கத்துக்குப் பின் திரும்ப வரும்போது என்ன நிகழ்கிறது?
புழக்கத்திலிருந்து திரும்பவரும் பணத்தாள்களும் நாணயங்களும் ரிசர்வ் வங்கியின் அலுவலங்களில் செலுத்தப்படுகின்றன. ரிசர்வ் வங்கி பிறகு அவற்றை, திரும்பவும் வழங்குவதற்கு ஏற்றது என்றும், ஏற்றத்தகாதது என்றும் பிரிக்கிறது. வழங்குவதற்குத் தகுதியல்லாதவை சிறுசிறு துகள்களாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. திரும்பப் பெறப்பட்ட நாணயங்கள் உருக்கப்படுவதற்காக நாணயக்கூடங்கள் அனுப்பப் படுகின்றன.
பொதுமக்கள் பணத்தாள்களையும் நாணயங்களையும் எங்கிருந்து பெறலாம்?
ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்திலிருந்தும், மற்றும் பணவறையையும் சிறுமதிப்பு நாணயக்கூடமும் கொண்டுள்ள, எந்த வங்கிக்கிளைகளிலிருந்தும் பணத்தாள்களையும் நாணயங்களையும் பெறலாம்.
இன்றைய நிகழ்வுகள்
பணத்தாள்களும் நாணயங்களும் ஏன் பற்றாக்குறையாக உள்ளன?
இது முழுவதும் சரி அன்று. சமீப நாட்கள் வரை பணத்தாள்களின் அளிப்பு தேவைக்குக் குறைவாகவே இருந்தது உண்மையே. இதற்குரிய முதன்மையான காரணம் இந்தியச் சமுதாயம் இன்னமும் ரொக்கப் பணம் காசையே முதன்மையாகக் கொண்டுள்ளது. இருந்தாலும், இப்போது பணத்தாள்களைப் பொறுத்தவரை அளிப்பில் சிக்கல் ஏதும் இல்லை. நாணயங்களைப் பொறுத்தவரை இந்திய அரசு நாணயங்களை இறக்குமதி செய்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாணயங்கள் தேவைக்கேற்ப அளிப்பு குறைவு என்னும் தோற்றம், மக்களின் பணத்தாள்களுக்கு முதன்மை கொடுக்கும் மனப்பாங்கினாலும் அதிகரிக்கப்படுகிறது.
பணத்தாள்களையே நம்பியிருப்பதைக் குறைக்க வழி உண்டா?
உண்டு. காசேலைகள், கடன் அட்டை, பற்று அட்டை, மின்னணு நிதிப் பரிமாற்றம் ஆகியன பெரிதும் பழக்கத்துக்கு வந்தால் பணத்தாள்களுக்கு உரிய தேவை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் பணத்தாள்கள் நாணயங்கள் ஆகியவற்றின் அளிப்பினை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?
ஆம். பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றின் அளிப்பினை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றுள் சில:
1) இப்போதுள்ள அரசுக்குச் சொந்தமான அச்சகங்களும், நாணயக்கூடங்களும் புதுமைப்படுத்தப்படுகின்றன.
|
Comments
Post a Comment